1980-ம் ஆண்டு முதல் அரியர் வைத்திருப்பவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு சென்னை பல்கலைக்கழகம் முடிவு

தொலைதூர கல்வி நிறுவனத்தில் 1980-ம் ஆண்டு முதல் தோல்வி அடைந்த பாடத்தை (அரியர்) தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்க சென்னை பல்கலைக்கழக ஆட்சிக்குழு முடிவு செய்துஇருக்கிறது.

சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி.துரைசாமி தலைமை தாங்கினார். இதில் நடப்பு கல்வியாண்டில் கல்வி முறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும், சில முக்கிய முடிவுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

அந்த கூட்டத்தில், ‘சென்னைபல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் 1980-ம் ஆண்டு முதல் அரியர் (தேர்ச்சி அடையாத பாடம்) வைத்திருப்பவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கலாம்’ என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன் அடைவார்கள் என்று பல்கலைக்கழக வட்டாரத்தில் பேசப்படுகிறது. 1980-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளில் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துஇருக்கிறது. அரியர் வைத்து இருக்கும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எம்.பி.ஏ. படிப்பை படித்தவர்கள் ஆவார்கள். அரியர் தேர்வு எழுதுவதற்கு சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு கூட்டம் 2 முறை வாய்ப்பு கொடுக்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த2 வாய்ப்புகளிலும் அனைத்து தாள்களில் வெற்றி பெறுபவர்கள் பட்டம் பெறுவார்கள். அதுவே 2 வாய்ப்புகளில் பாதிக்கும் மேற்பட்ட தாள்களில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு சான்றிதழ் படிப்பு அல்லது டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக... சான்றிதழ் படிப்பு அல்லது டிப்ளமோ சான்றிதழ் பெறுபவர்கள் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பை தொடருவதற்கு ஆசைப்பட்டால், 2-ம் ஆண்டு சேர்க்கையில் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தியாவிலேயே இந்த திட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் தான் முதன்முறையாக கொண்டு வரப்பட்டு இருக்கிறது என்றும், ஆட்சிக்குழு ஒப்புதல் அளித்துவிட்டதால் விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment