கோவை : மாநிலம் முழுவதும், 28 தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், ஆய்வக வசதியின்மை காரணமாக, கடந்த கல்வியாண்டிற்கான செய்முறை தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்து உள்ளது.தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கீழ், 700 பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இக்கல்லுாரி மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள், செய்முறை, எழுத்து என்ற இரு பிரிவுகளாக, ஏப்., மே மாதங்களில் நடந்தன.

இத்தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. ஆனால், கோவை மண்டலத்தில், இரண்டு கல்லுாரிகள் உட்பட, மாநிலம் முழுவதும், 28 கல்லுாரிகளுக்கு செய்முறை தேர்வுகள், இதுவரை நடத்தப்படாததால், தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதுவரை, செய்முறை தேர்வுகள் நடத்தப்படாமல் இருப்பதால், இறுதியாண்டு மாணவர்கள், உயர்கல்வியை தொடர்வதில் சிக்கல் எழுந்துள்ளது.பாலிடெக்னிக் கல்லுாரிகள் ஆசிரியர் சங்க நிர்வாகி, ராஜசேகரன் கூறியதாவது: தமிழகத்தில், 28 கல்லுாரிகளில், ஆய்வக வசதி, அடிப்படை செய்முறை தேர்வுக்கான உபகரணங்கள் இல்லை என்பதால், தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 
இம்மாணவர்கள், உரிய ஆய்வக வசதி இல்லாமல், செய்முறை பயிற்சிகளை எவ்வாறு மேற்கொண்டு இருப்பர் என்பது கேள்விக்குறி.ஆய்வக வசதிகள் இல்லாத கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவது, அதிகாரிகளின் அலட்சியப் போக்கை காட்டுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொழில்நுட்ப கல்வி இயக்குனரக அலுவலர் ஒருவர் கூறுகையில், 'இச்சிக்கல் குறித்து, பல முறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. ஆனால், உரிய நடவடிக்கைக்கான ஒப்புதல் கிடைக்கவில்லை' என்றார்.