கோவை:மலிவு விலை, 'சானிட்டரி நாப்கின்' தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கிய, அருணாசலம் முருகானந்தம் பற்றிய தகவல், பிளஸ் 2 பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.


கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர், அருணாசலம் முருகானந்தம். பல்வேறு இடையூறு களுக்கு இடையே, இவர், மலிவு விலை, சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கினார். இது, பெரும் வரவேற்பை பெற்றது.தற்போது இவர், சானிட்டரி நாப்கின் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

மத்திய அரசு, 2016ல், இவருக்கு, 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கவுரவித்துள்ளது. முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான, 'டைம்' இதழின், உலகின், 100 செல்வாக்கு மிகுந்த மனிதர்கள் பட்டியலில், 2014ம் ஆண்டு இடம் பெற்றார்.இவரது வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக வைத்து, ஹிந்தியில், பேட்மேன் படம், அக்ஷய் குமார் நடிப்பில் வெளியானது.

இந்நிலையில், இவர் பற்றிய தகவல், நடப்பாண்டு வெளியாகியுள்ள,பிளஸ் 2 உயிர் விலங்கியல் பாடப்பிரிவில், 'மனித இனப்பெருக்கம்' என்ற பாடத்தில் இடம் பெற்றுள்ளது.'தனி நபர் ஆய்வு' என்ற வகையில், 'கண்டுபிடிப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர்' என்ற பெயரில், முருகானந்தம் பற்றிய தகவல்கள், அவரது படத்துடன், முழுப் பக்க அளவில் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து, முருகானந்தம் கூறியதாவது:தமிழக அரசின் செயல், மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பாடப் புத்தகங்களில், கண்டுபிடிப்பு என்றாலே, தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டீன் பெயர்கள் தான் இருக்கும்; ஐரோப்பா அல்லது அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் படங்கள் தான் இருக்கும்.நமக்கும், கண்டுபிடிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவே, பல்லாண்டு கடந்து போய் விட்டன.

முதல் முறையாக, ஒரு கண்டுபிடிப்பின் பெயரில், தமிழரின் பெயரை பார்க்கும் மாணவர்கள், தங்களுக்குள்ளும் இருக்கும் விஞ்ஞானியை, நிச்சயம் வெளிப்படுத்துவர். அதற்கான துாண்டு கோலாக, இந்த பாடம் அமையும்.மாதவிலக்கு காலத்தில், பெண்கள் படும் துயரங்களை, மாணவர்களும் அறிந்து கொள்வர். அதன் மூலம், பெண்களின் மதிப்பு, மாணவர்கள் மத்தியில் உயரும்.இவ்வாறு, முருகானந்தம் கூறினார்.