3 மையங்களில் இன்று கணினி ஆசிரியர் மறுதேர்வு

சென்னை, அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பதவிக்கு, மூன்று மையங்களில், இன்று மறுதேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்விலாவது, காப்பியடிப்பது தடுக்கப்படுமா என, தேர்வர்கள் எதிர்பார்த்துள்ளனர்.அரசு பள்ளிகளில், முதுநிலை கணினி ஆசிரியர் பதவிக்கு, 814 காலியிடங்களை நிரப்ப, கடந்த, 23ல் தேர்வு நடத்தப்பட்டது. 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்த, இந்த தேர்வில், கணினி, 'சர்வர்' தொழில்நுட்ப கோளாறால், பலர் தேர்வு எழுத முடியாமல் போனது.மேலும், மாணவர்கள் குழுவாகச் சேர்ந்து காப்பியடித்தது என, பெரும் குளறுபடி ஏற்பட்டது. இதையடுத்து, மூன்று தேர்வு மையங்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்தது.இந்நிலையில், இன்று மறுதேர்வு நடத்தப்படுகிறது. இதில், 1,221 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த மறுதேர்விலாவது, தேர்வர்கள் காப்பியடிப்பது தடுக்கப்படுமா என, பள்ளி கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களும் எதிர்பார்த்துள்ளனர்.இதற்கிடையே, குளறுபடியுடன் நடந்த, கணினி ஆசிரியர் தேர்வை ரத்து செய்து, அனைத்து மாவட்டங்களுக்கும், எழுத்து தேர்வு நடத்த வேண்டும் என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, வேலையில்லா கணினி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ள கட்டட வளாகம் முன், நேற்று போராட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment