ஈரான் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் முடிவால் சவரனுக்கு 464 உயர்ந்த தங்கம் மாலையில் 272 குறைந்தது: 26,000ஐ தாண்டியதால் மக்கள் அதிர்ச்சி,.. இரண்டு நாளில் ரூ.1000 எகிறியது


சென்னை: சென்னையில் ஆபரண தங்கள் நேற்று காலை சவரனுக்கு 494 உயர்ந்து 26,168க்கு விற்பனையானது. சவரன் 26,000ஐ தாண்டியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாலையில் திடீரென சவரனுக்கு 272 குறைந்து 25,896 ஆனது. இதற்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தும் முடிவை டிரம்ப் கைவிட்டதே காரணம் என நகை வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகிறது. கடந்த 14ம் தேதி தங்கம் சவரனுக்கு 312 உயர்ந்து 25,288க்கு விற்பனையானது. இந்த மாதத்தின் துவங்கிய பிறகு அதிகபட்ச உயர்வாகவும் இது இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து சவரன் 25,000த்துக்கு மேல்தான் நீடித்து வருகிறது. கடந்த 15 மற்றும் 17ம் தேதியை தவிர மற்ற நாட்கள் எல்லாம் உயர்வுடனே இருந்து வருகிறது. அமெரிக்க பெடரல் வங்கி கூட்டமைப்பு வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் இருந்தனர். ஆனால், இதற்கு மாறாக, பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. இதன்காரணமாக சர்வதேச சந்தையில் ஒரே நாளில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் 35 டாலர் வரை உயர்ந்தது. இதனால் சென்னையில் நேற்று முன்தினம் ஆபரண தங்கம் சவரனுக்கு 528 அதிகரித்து கிராம் ₹3,213க்கும், சவரன் 25,704க்கும் விற்கப்பட்டது. 
இதை தொடர்ந்து சென்னையில் ஆபரண தங்கம் நேற்று சவரனுக்கு 464 உயர்ந்து கிராம் 3,271க்கும் சவரன் 26,168க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், மாலையில் 272 குறைந்து, 25,896 ஆனது. இருப்பினும் காலை நிலவரப்படி 2 நாளில் சவரனுக்கு 1,000 அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க கவுரவ செயலாளர் சாந்தகுமார் கூறுகையில், ''நேற்று முன்தினம் பெடரல் வங்கி வட்டி மாற்றம் செய்யாததால் தங்கத்தில் முதலீடு குவிந்தது. இதன் தொடர்ச்சியாக, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால் இந்த இரு நாடுகள் இடையே போர் பதற்றமான சூழ்நிலை உருவானது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இதுவே காலையில் தங்கம் விலை உயர்ந்ததற்கு காரணம். இருப்பினும், ஈரான் மீதான தாக்குதல் முடிவை டிரம்ப் கைவிட்டதால் தங்கம் விலை மாலையில் குறைந்துள்ளது. ஆனால், விலை இப்போதைக்கு குறையாது. உயர்வதற்கான வாய்ப்புகளே உள்ளன என்றார்.

போக்குக்காட்டிய தங்கம்
பெடரல் வங்கி வட்டியை உயர்த்தாததால், சர்வதேச சந்தையில் 2 நாள் முன்பு ஒரு அவுன்ஸ் தங்கம் 1,385 டாலரை தாண்டியது. நேற்று முன்தினம் இரவு சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் 1,400 டாலரை தாண்டியது. வரலாறு காணாத உச்சமாக ஒரு அவுன்ஸ் 1,415க்கு மேல் உயர்ந்தது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத உச்சபட்ச உயர்வாக கருதப்படுகிறது. நேற்று காலை சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் 1,405 என் அளவில் வர்த்தகம் ஆனது. ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்ததால் இந்த நிலை ஏற்பட்டதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். ஆனால் தாக்குதல் முடிவை கைவிட்டதால் விலை மீண்டும் சரிந்தது. நேற்று மாலையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1,396 டாலராக இருந்தது.

No comments:

Post a Comment