எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்: 59,632 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நிகழாண்டில் மொத்தம் 59,632 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 7-ஆம் தேதி 
தொடங்கியது. ww.tnhealth.org
மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவ, மாணவிகள் அதற்கு விண்ணப்பித்தனர்.
அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 39,013 பேர், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 29,007 பேர் என மொத்தம் 68,020 பேர் விண்ணப்பித்திருந்தனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் நேரிலும், தபால் மூலமாகவும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் சமர்ப்பிக்கும் காலஅவகாசம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. 
அதன்படி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 34,368 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,388 விண்ணப்பங்கள் என மொத்தம் 59,756 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 2-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
முதல் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 4-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளன்று சிறப்பு பிரிவு மற்றும் பெருந்துறை ஐஆர்டி கல்லூரியில் தொழிலாளர்களின் வாரிசுகள் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 5-ஆம் தேதி பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து நிரப்பப்படாமல் உள்ள இடங்கள் திரும்பக் கிடைத்ததும், இரண்டாம் கட்ட கலந்தாய்வை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment