சென்னை : தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், புதிய பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகங்களை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 77.48 லட்சம் மாணவர்களுக்கு வழங்கும் பணியை, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், நேற்று துவக்கி வைத்தார்.


தொழில்நுட்ப மாற்றம்:
மாணவர்களின் முழுமையான ஆளுமை திறனை வளர்க்கவும், உலகளாவிய அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப கல்வி கற்கவும், புதிய பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள், 2018 மே, 4ல் வெளியிடப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, 2019 - 2020ம் கல்வியாண்டிற்கு, 195 கோடி ரூபாய் செலவில், இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஏழு, எட்டு, பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

முன்னோடி மாநிலம்:
அவற்றை, மாணவ, மாணவியருக்கு வழங்கும் பணியை, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், நேற்று சென்னை, தலைமை செயலகத்தில், துவக்கி வைத்தார். பின், அவர், நிருபர்களிடம் கூறியதாவது: புதிய பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை படிக்க, 220 நாட்கள் தேவை. அதன் காரணமாகவே, திட்டமிடப்படி, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில், குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க, உள்ளாட்சி துறையுடன் இணைந்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

மத்திய அரசால் நடத்தப்படும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் அறிவுத்திறன், நம் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில், புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் கல்வித் துறையில், தமிழகம், முன்னோடி மாநிலமாக திகழும் வகையில், இந்த மாற்றங்களை, அரசு மேற்கொண்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.