பள்ளி மாற்றும்போது கவனம்!

புதிய பள்ளிக்கு குழந்தைகளை மாற்றுவதற்கு முன், அவர்களை மனதளவில் தயார்படுத்த ஆலோசனைகளை வழங்கும், கல்விப் பணியில், 40 ஆண்டு அனுபவமுள்ள, பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரமம் பள்ளியின் முன்னாள் சீனியர் முதல்வர், அஜித் பிரசாத் ஜெயின்: சி.பி.எஸ்.இ., பள்ளியிலிருந்து, இன்னொரு, சி.பி.எஸ்.இ., பள்ளிக்கு உங்கள் பிள்ளையை மாற்றுகிறீர் என்றால், குழந்தைகளின் படிப்பு விஷயத்தில், பதற்றப்பட வேண்டியதில்லை.அவர்களின் நண்பர்கள் விஷயத்தில், 'உன் பழைய நட்புகளை, தாராளமாக தொடரலாம். அதற்கு நானும் உதவி செய்கிறேன்' என, வாக்கு கொடுப்பதோடு, உங்கள் அலைபேசி எண்ணையும் நண்பர்களிடம் பகிர சொல்லலாம்.தற்போது படித்துக் கொண்டிருக்கும் பள்ளியில், இதர தகுதிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்று கருதி, படிப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் பள்ளிக்கு, சிலர் மாற்றுவர். அந்த பிள்ளைகளிடம், 'நீ விரும்புகிற மாதிரி புரொபஷனல் டிகிரி படிக்க, இந்த பள்ளி தான் சரி' என்று எடுத்துக் கூறினால், அவர்கள் புரிந்து கொள்வர்.ஒருவேளை, சமச்சீர் கல்வியில் படித்து கொண்டிருக்கும் பிள்ளையை, சி.பி.எஸ்.இ-.,க்கு மாற்றினால், உங்கள் பிள்ளையை மனரீதியாகவும், பாடத்திட்ட ரீதியாகவும், தயார்படுத்த வேண்டும். ஏனென்றால், இரண்டு கல்வி முறைகளிலும், பாடத் திட்டம், கற்பிக்கும் முறை, கேள்வித் தாள், விடைத்தாள் திருத்தும் முறை என, எல்லாமே வித்தியாசமாக இருக்கும்.சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், எல்லா பாடங்களிலும், 20 மதிப்பெண்ணுக்கு, உள் மதிப்பீடு இருக்கிறது. அடிக்கடி விடுமுறை எடுக்காமல் இருப்பது, பள்ளிக்கு நேரத்துக்கு வருவது, வீட்டுப் பாடங்களை சரியாக செய்வது, வகுப்பறையில் கவனம், மாத தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண் என, ஓராண்டு முழுக்க மாணவர்களை கண்காணித்து, அதன் அடிப்படையில், இந்த, ௨௦ மதிப்பெண்ணை வழங்குவர்.எனவே, ஆண்டு முழுக்க படித்தால் மட்டுமே, சி.பி.எஸ்.இ-.,யில் ஜெயிக்க முடியும். சமச்சீர் கல்வியிலிருந்து, சி.பி.எஸ்.இ-.,க்கு குழந்தைகளை மாற்றும்போது, இதை அவர்களிடம், வலியுறுத்தி சொல்ல வேண்டும்.ஒருவேளை, சி.பி.எஸ்.இ-.,யில் இருந்து, சமச்சீர் கல்விக்கு மாற்றினால், 'இதனால் உன் படிப்பின் தரம் குறையாது. இன்றைய தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம், தேர்வு முறையில், புதிய முறை புகுத்தப்பட்டு வருகிறது' என்று அதன், 'பாசிட்டிவ்' விஷயங்களை கூறலாம்.புதிய பள்ளியில், நண்பர்கள் கிடைக்காமல் கவலைப்பட்டால், அவர்களிடம் பேசி நட்பை ஏற்படுத்த, ஆலோசனை வழங்கலாம். ஒருவேளை, புதிய பள்ளியில், மிக மோசமாக கேலி, கிண்டல் செய்கின்றனர் என்றால், பள்ளி நிர்வாகத்தை அணுகி, தீர்வு காணலாம்.

No comments:

Post a Comment