அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்த மாஜிஸ்திரேட்

நாமக்கல் : நாமக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட், தன் இரண்டு குழந்தைகளை, அரசு பள்ளியில் சேர்த்துள்ளார்.


அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் பலர், தங்கள் குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். இந்நிலையில், மாஜிஸ்திரேட் ஒருவர், தன் குழந்தைகளை, அரசு பள்ளியில் சேர்த்து, பலருக்கு முன்னுதாரணமாகி உள்ளார்.

நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்: 1ல், மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருபவர் வடிவேல், 45. இவர், நேற்று காலை, நாமக்கல் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, மகள் ரீமாசக்தி, 13, மகன் நிஷாந்த் சக்தி, 11, ஆகியோருடன் வந்தார். தலைமை ஆசிரியை சாந்தியை சந்தித்தார்.

தன் குழந்தைகளுக்கு சேர்க்கை வழங்கக் கோரி, அதற்கான விண்ணப்பத்தை வழங்கினார். ரீமாசக்தி, எட்டாம் வகுப்பிலும், நிஷாந்த் சக்தி, ஆறாம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர்.வடிவேல், திருச்சி மாவட்டம், துறையூரில் பணியாற்றியபோது, குழந்தைகளை அங்குள்ள அரசு பள்ளியில் சேர்த்துஇருந்தார்.