சென்னை:இந்திய அரசு துறைகளில் காலியாக உள்ள, 896 உயர் பதவிகளுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு, நேற்று நாடு முழுவதும் நடந்தது. இதில், 20 லட்சம் பேர் பங்கேற்றனர்.


இந்திய அரசின் உயரிய பதவிகளுக்கு, யு.பி.எஸ்.சி., என்ற, ஒருங்கிணைந்த பொது பணிகள் ஆணையம் வழியாக, புதிய ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., என, 24 வகை பதவிகளுக்கான காலியிடங்கள், யு.பி.எஸ்.சி., தேர்வின் வழியாக நிரப்பப்பட உள்ளன.இந்தாண்டு, 896 காலியிடங்களுக்கு, மார்ச்சில் போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டது.இதன்படி, முதல்நிலை தகுதி தேர்வுக்கு, 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். இந்த முதல் நிலை தேர்வு, நேற்று நாடு முழுவதும், 72 நகரங்களில் நடத்தப்பட்டது.

தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. காலை, மாலை என, இரு பிரிவாக தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வு மையங்களுக்குள், மொபைல் போன் மற்றும் மின்னணு பொருட்கள் அனுமதிக்கப்படவில்லை. முழுமையான போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு நடத்தப்பட்டது.