திருப்பூர்: தமிழகம் முழுவதும், ஒவ்வொரு மாவட்டத்திலும், பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள், 1,000த்துக்கும் மேல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களை, கல்விக் கூடங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, 6 முதல், 18 வயதுடைய அனைவருக்கும், கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது, மத்திய அரசின் உத்தரவு. இதன்படி, தமிழகம் முழுவதும், பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் புலம் பெயர்ந்த குழந்தைகள், மாற்றுத் திறனாளி குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு, ஏப்ரல், 15ல் துவங்கி, மே, 31 வரை நடந்தது.ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில், அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், தலைமையாசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், தன்னார்வலர்கள் இக்கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். அனைத்து குடியிருப்புகளிலும், வீடு, வீடாக கணக்கெடுப்பு நடந்தது.தொழிற்சாலை, ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்ட்கள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில், தொழிலாளர் நலன், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், 'சைல்டு லைன்', சமூக பாதுகாப்பு மற்றும் போலீஸ் ஆகிய துறைகளுடன் இணைந்து, ஆய்வு நடத்தப்பட்டது.ஒவ்வொரு மாவட்டத்திலும், பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை, 500ல் துவங்கி, 1,000த்தை தாண்டியுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், இவர்களை, அருகில் உள்ள பள்ளிகள், உண்டு உறைவிடப் பள்ளிகள், இணைப்பு மையங்களில், வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கற்றல் திறன் அடிப்படையில், சிறப்பு பயிற்சி மையங்கள், உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்த்து, சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு, அவர்களது உடல்நிலை, வயதுக்கு ஏற்றாற் போல், வீட்டு வழிக்கல்வி, பள்ளி ஆயத்தப் பயிற்சி மையம், முறையான பள்ளி ஆகியவற்றில் சேர்த்து, பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.