விடுபட்ட சான்றிதழ்களை கவுன்சிலிங்கில் தரலாம்: மருத்துவ கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை:''மருத்துவ படிப்புக்கு தேவையான சான்றிதழ்களை, விண்ணப்பத்துடன் இணைக்காதவர்கள், கவுன்சிலிங்கிற்கு வரும் போது கொடுத்தால் போதும்,'' என, மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர், செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 முடித்து, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, தமிழக அரசின், மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலை, பதிவிறக்கம் செய்து, சான்றிதழ்களை இணைந்து, மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

இந்த விஷயத்தில், சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் தொடர்பான விபரங்களை, ஆன்லைனில் இயக்குனரகம் அவ்வப்போது மாற்றி வருகிறது. முதலில், குறிப்பிட்ட சில சான்றிதழ்களை மட்டும் இணைத்தால் போதும் என, தெரிவித்த இயக்குனரகம், பின், மேலும் பல சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என, கூறியது.
இதனால், விண்ணப்பத்தை ஏற்கனவே சமர்ப்பித்த மாணவர்கள், கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். தங்களால் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாமல் போய் விடுமோ என, அஞ்சுகின்றனர்.ஏற்கனவே, 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்தை சமர்ப்பித்து உள்ளனர். அவர்கள், விடுபட்ட சான்றிதழ்களை எப்படி ஒப்படைப்பது என, தெரியாமல் தவிக்கின்றனர். பெற்றோரும், இந்த விஷயத்தில் கவலையில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் மாணவர்கள், எந்தெந்த சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது தொடர்பாக, தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.இதையடுத்து, விண்ணப்பத்துடன் சில சான்றிதழ்களை சமர்ப்பிக்க மாணவர்கள் தவறினாலும், அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படாது என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜன் கூறியதாவது:

* மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பத்துடன், ஏற்கனவே கேட்டிருந்தபடி, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' இணைக்க தேவையில்லை.

* ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்ததற்கான, 'போனபைடு' என்ற, உறுதி சான்றிதழ் வழங்க வேண்டியதில்லை; மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் அளித்தால் போதும். முறைகேடுகளை தடுக்க, பெற்றோரின் ஜாதி சான்றிதழை கட்டாயம் அளிக்க வேண்டும்

* விண்ணப்பத்துடன், சில சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பம் நிராகரிக்கப்படமாட்டாது. விடுபட்ட சான்றிதழ்களை, கவுன்சிலிங்கின் போது கொடுக்கலாம். அதற்கு முந்தைய நாட்களிலும், பதிவு தபாலில், சான்றிதழ்களை அனுப்பி வைக்கலாம்
* எந்தெந்த சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது கவுன்சிலிங்கின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறித்த தெளிவான அறிவிப்பு, ஓரிரு நாட்களில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment