சென்னை:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் படிக்கும், 70 லட்சம் மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று துவக்கி வைத்தார்.

தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 70 லட்சம் மாணவர்களுக்கு, 12.70 கோடி ரூபாயில், 'ஸ்மார்ட்' அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. அவர்களின் சுய விபரங்களை பதிவு செய்யும் வசதியுடன், இந்த அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த, ஸ்மார்ட் அட்டைகளை, மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தை, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.
காவல் துறை ஆண்டு மலர்
*தமிழ்நாடு காவல் துறை, 2018ல் கையாண்ட வழக்குகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் குறித்த செய்திகளை தொகுத்து, 'ஆண்டு மலர் - 2018' தயாரிக்கப்பட்டது. இப்புத்தகத்தை, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று தலைமை செயலகத்தில் வெளியிட, அதை, உள்துறை செயலர், நிரஞ்சன் மார்டி, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பெற்றனர்.
*காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில், 10 ஏக்கரில், 51.14 கோடி ரூபாயில், 'காவலர் பொதுப்பள்ளி' அமைக்கும் முதற்கட்ட பணிகளுக்கு, முதல்வர் அடிக்கல் நாட்டினார். சென்னை, எழிலகத்தில், 15.07 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டப்பட உள்ள, பேரிடர் மேலாண்மை அலுவலகத்தின், ஒருங்கிணைந்த கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டினார்புதிதாக பணி நியமனம்
* தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனரகத்தில், காலியாக உள்ள, 101 நில அளவையாளர் மற்றும் 157 வரைவாளர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை, முதல்வர் வழங்கினார்
* தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட, போலீஸ் குடியிருப்புகள், வருவாய்த்துறை அலுவலகங்கள், பள்ளி கட்டடங்களும் திறக்கப்பட்டன.நிகழ்ச்சியில், அமைச்சர்கள், செங்கோட்டையன், ராஜு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.