நீதிமன்ற பணி தேர்வு, ஒத்தி வைப்பு

கோவை, நீதிமன்ற பணி தேர்வு, கடைசி நேரத்தில், ஒத்தி வைக்கப்பட்டதால், தகவல் தெரியாமல், தேர்வர்கள் தேர்வு மையம் முன் திரண்டனர்.கோவை மாவட்டத்தில், நீதிமன்றங்களில் காலியாக உள்ள, 10 முதுநிலை கட்டளை நிறைவேற்றுபவர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, ரேஸ்கோர்ஸ், ரெட்பீல்டு நிர்மலா மகளிர் கல்லுாரியில், நேற்று நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பித்தவர்களில், 3,900 பேருக்கு, எழுத்து தேர்வுக்கான கடிதம் அனுப்பப்பட்டது.இந்நிலையில், நிர்வாக காரணங்களால், எழுத்து தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக, மாவட்ட நீதித்துறை நிர்வாகம், நேற்று முன்தினம், திடீர் அறிவிப்பை, அதன் வலைதளத்தில் வெளியிட்டது.இதையறியாத, 200க்கும் மேற்பட்ட தேர்வர்கள், நேற்று அதிகாலையே, தேர்வு நடக்கும் இடத்தில் திரண்டனர். அங்கு, நீதித்துறை நிர்வாகம் சார்பில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை கண்டு அதிருப்தியடைந்தனர்; மறு தேதியும் அறிவிக்கப்படவில்லை. இதனால், தேர்வர்கள் தங்கள் ஊருக்கு திரும்பினர்.கரூர், குளித்தலையில் இருந்து வந்திருந்த அரவிந்த், 25, கூறியதாவது:தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது குறித்து, தகவல் தெரியவில்லை. கல்லுாரிக்கு வந்து பார்த்தபோது தான் தெரிந்தது. இதை, முன்பே தெரிவித்திருந்தால், வெட்டி அலைச்சல் ஏற்பட்டிருக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.இதேபோல், கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட, கோவை மாவட்ட, சிவில் நீதிமன்றங்களில் காலியாக உள்ள, 83 காலிப் பணியிடங்களுக்கான தேர்வும், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment