வகுப்பறையாக மாறிய ரேஷன் கடை


தஞ்சாவூர் : தஞ்சை அருகே, ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி கட்டடம் சேதமடைந்ததால், பள்ளி துவங்கிய, முதல் நாளான நேற்று, ரேஷன் கடை கட்டடம், வகுப்பறையாக மாற்றப்பட்டது.

தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகே உள்ள, ஒக்கநாடு கீழையூர் ஊராட்சியைச் சேர்ந்தது, கருவிழிக்காடு கிராமம். இங்குள்ள, ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில், 30 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இரண்டு, ஆசிரியைகள் பணிபுரிகின்றனர்.இந்நிலையில், கோடை விடுமுறைக்கு பின், நேற்று, பள்ளிகள் திறக்கப்பட்டன. கருவிழிக்காடு பள்ளிக்கு வந்த ஆசிரியைகள், கட்டடம் முற்றிலும் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது கண்டு, அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே, மாணவர்களை, அதே பகுதியில் உள்ள, ரேஷன் கடைக்கு அழைத்து சென்று, அங்கு உட்கார வைத்து, பாடம் நடத்தினர்.இதையறிந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளி முன் திரண்டு, அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.