'பள்ளியின் அங்கீகாரத்தை சரி பாருங்கள்'

சென்னை, 'பள்ளியின் அங்கீகாரத்தை பெற்றோர் சரிபார்த்து, குழந்தையை சேர்க்க வேண்டும்' என, சென்னை கலெக்டர், சண்முகசுந்தரம், பெற்றோருக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.சென்னையில், தடையின்மை மற்றும் அங்கீகாரத்தைப் பெறாமல், 331 பள்ளிகள் செயல்படுவதாகவும், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நேற்று முன்தினம், சென்னை கலெக்டர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.இது குறித்து, நேற்று அவர் கூறியதாவது:மாவட்ட அதிகாரிகளால், அங்கீகரிக்கப்படாத பள்ளிகளைக் கண்டறிய, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, வழக்கமான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. கண்டறியும் பள்ளிகளுக்கு, உரிய ஆவணங்களுடன் கோப்புகளை சமர்ப்பிக்க, அவகாசம் அளிக்கப்படுகிறது. பதிலளிக்காத பள்ளிகள், அங்கீகரிக்கப்படாத பள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.உரிய ஆவணங்கள் மற்றும் பள்ளி கல்வித் துறையின் விதிமுறைகளின்படி, பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்காத, இந்த பள்ளிகளுக்கு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, இரண்டு அறிவிப்புகளை வழங்கிய பின், மூடல் அறிவிப்பு வழங்கப்படும்.போலீஸ் பாதுகாப்புடன் மூடல் அறிவிப்பு, முதன்மை கல்வி அலுவலரால், பள்ளியின் வாயிலில் ஒட்டப்பட்டு, பள்ளிகள் மூடப்படும். பள்ளிகளில் சேர்க்கை பெற விரும்பும் பெற்றோர், அந்த பள்ளியின் அங்கீகாரத்தை, குழந்தையை அனுமதிப்பதற்கு முன், சரிபார்க்க வேண்டும்.அங்கீகரிக்கப்படாதது தெரிய வந்தால், உடனடியாக, மாவட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அந்த பள்ளிகளின் மீது, விதிமுறைகளின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு, கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.

No comments:

Post a Comment