சென்னை : ''தமிழகத்தில் உள்ள, மத்திய அரசு அலுவலகங்களில், தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார்.காயிதே மில்லத்தின், 126வது பிறந்த நாளை ஒட்டி, நேற்று, சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில், ஸ்டாலின், மலர் போர்வை போர்த்தி, மரியாதை செலுத்தினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உடனிருந்தார்.

பின், ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது:காயிதே மில்லத்தின் பிறந்த நாளில், ரம்ஜான் பண்டிகையும் கொண்டாடக் கூடிய, ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாட்டின் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நேரத்தில், மத்திய ஆட்சிமொழியில் ஒன்றாக, தமிழை ஆக்க வேண்டும் என, காயிதே மில்லத் குரல் கொடுத்திருக்கிறார்.இன்று, மும்மொழித் திட்டம் என்ற பெயரில், ஹிந்தியை திணிக்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் தெரிவித்த பின், ஹிந்தி திணிப்பு என்ற வார்த்தையை திரும்ப பெறுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள, மத்திய அரசு அலுவலகங்களில், தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும். அதற்காக, தி.மு.க., தொடர்ந்து குரல் கொடுக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.