சென்னை : இன்ஜினியரிங் படிப்பில், கல்லுாரி மாற்றத்துக்கான ஆன்லைன் பதிவு துவங்காததால், மாணவர்கள், கூடுதல் கல்வி கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், அரசு ஒதுக்கீட்டில் கவுன்சிலிங் வாயிலாகவும், நிர்வாக ஒதுக்கீட்டில் நேரடியாகவும், இன்ஜினியரிங் படிப்பில் சேர்கின்றனர். இவ்வாறு சேரும் மாணவர்களது, பெற்றோரின் பணியிட மாறுதல், வீடு மாற்றம், தொழில் காரணமாக, வேறு இடத்துக்கு குடி பெயரும் போது, கல்லுாரிகளை மாற்ற வேண்டிய தேவை உள்ளது.

ஆன்லைன்:
இந்த கல்லுாரி மாற்றம் என்பது, ஒவ்வொரு கல்வி ஆண்டு துவங்கும் போதும் மேற்கொள்ளப்படும். இதற்கு, மாணவர்கள், தாங்கள் படிக்கும் கல்லுாரிகளில், முன் கூட்டியே தகவல் அளிப்பர். அதேபோல, புதிய ஊரில் உள்ள கல்லுாரியில் இடம் இருப்பதை உறுதி செய்வர். அந்த கல்லுாரியிலும் விண்ணப்பம் அளித்து, மாணவர் சேர்க்கைக்கு கோரிக்கை வைக்கப்படும்.

இந்த கல்லுாரி மாற்றத்துக்காக, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், கல்லுாரிகளுக்கும், மாணவர்களுக்கும், தனித்தனியாக தடையில்லா சான்று வழங்கும். இதற்காக, ஒவ்வொரு கல்வி ஆண்டு துவங்கும் முன், தடையில்லா சான்று வழங்குவதற்கான பணிகள் துவங்கி விடும். சில ஆண்டுகளாக, ஆன்லைன் வழியே இந்தப் பதிவு நடக்கிறது. தற்போது, புதிய கல்வி ஆண்டு துவங்கி விட்ட நிலையில், இன்னும் கல்லுாரி மாற்றத்துக்கான ஆன்லைன் பதிவுகள் துவக்கப்படவில்லை. அதனால், கல்லுாரி மாறும் மாணவர்களின் நிலை, இழுபறியாக உள்ளது.

கோரிக்கை:
கல்லுாரி மாறவிருக்கும் பழைய மாணவர்களிடம், கல்லுாரிகளும், புதிய கல்வி ஆண்டுக்கும், கட்டணம் செலுத்த நிர்பந்திக்கின்றன. அதேபோல, புதிய கல்லுாரியிலும், புதிய கல்வி ஆண்டுக்கான கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், ஒரே கல்வி ஆண்டில், இரண்டு கல்லுாரிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை, மாணவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

எனவே, கல்லுாரி மாற்றத்துக்கான ஆன்லைன் பதிவை துவங்கவும், மாறும் கல்லுாரிகளில் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், தொழில்நுட்ப இயக்குனரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.