இன்று ஆசிரியர் தகுதி தேர்வு

ஆசிரியர் தகுதி தேர்வு என்ற, 'டெட்' தேர்வு, இன்றும், நாளையும்(ஜூன் 8, 9) நடக்கிறது. காப்பியடிப்பதை தடுக்க, 2,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.


மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த சட்டம், தமிழகத்தில், 2010 ஆகஸ்டில் அமலுக்கு வந்தது. இதன்படி, கல்வியியல் படிப்பு முடித்த பட்டதாரிகள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிற்றுவிக்க, டெட் தேர்வின் முதல் தாளிலும், எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த, இரண்டாம் தாள் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.


தமிழகத்தில் இதுவரை, நான்கு முறை, டெட் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. ஐந்தாவது, டெட் தேர்வை, டி.ஆர்.பி., எனப்படும், ஆசிரியர் தேர்வு வாரியம், இன்றும், நாளையும், தமிழகத்தில் நடத்துகிறது. முதல் தாள் தேர்வுக்கு, இரண்டு லட்சம் பேரும், இரண்டாம் தாளுக்கு, நான்கு லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.முதல் தாள் தேர்வு இன்றும், இரண்டாம் தாள் தேர்வு, நாளையும் நடக்கிறது. காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை தேர்வு நடக்கும். தேர்வு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன், தேர்வு மையத்துக்கு வர, தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முதல் தாளுக்கு, 471 மையங்கள்; இரண்டாம் தாளுக்கு, 1,081 என, மொத்தம், 1,552 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும், முதல் தாளுக்கு, 28; இரண்டாம் தாளுக்கு, 60 என, 88 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு பணியில், ஒரு லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காப்பியடிப்பது போன்ற முறைகேடுகளை தடுக்க, 2,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment