புதிய தலைமை செயலர் சண்முகம் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., திரிபா

புதிய தலைமை செயலர் சண்முகம் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., திரிபாதி


சென்னை, தமிழக அரசின் புதிய தலைமை செயலராக சண்முகம், புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக திரிபாதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் இன்று மதியம் ஓய்வு பெறுகிறார். அதேபோல் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரனும் இன்று ஓய்வு பெறுகிறார்.நிதித்துறை செயலராக இருந்த சண்முகம் நேற்று புதிய தலைமை செயலராக நியமிக்கப்பட்டார். இன்று மதியம் முதல் அவர் 46வது தலைமை செயலராக செயல்படுவார்.தமிழக போலீசின் தலைமை பதவியான சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக திரிபாதி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக இருந்தார். இவர் நாளை முதல் டி.ஜி.பி.,யாக செயல்படுவார்.தலைமை செயலர்புதிய தலைமை செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் சண்முகம் சேலம் மாவட்டம் வாழப்பாடி கிராமத்தில் 1960 ஜூலை 7ல் பிறந்தார்; விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். வேளாண்மை கல்வியில் எம்.எஸ்சி. பட்டம் பெற்றார். குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி.ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்று 1985 ஆக., 27ல் அரசுப் பணியில் சேர்ந்தார். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் பயிற்சி உதவி கலெக்டராக பணியை துவக்கினார். புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றினார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மை செயலர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.தி.மு.க., ஆட்சியில் 2010ல் நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டார். அதன்பின் ஆட்சி மாறியபோதும் நிதித்துறை செயலராகவே தொடர்ந்தார். சட்டசபையில் ஒருமுறை தி.மு.க.,வை சேர்ந்த துரைமுருகன் பேசுகையில், 'புராணங்களில் இந்திரன்கள் மாறுவர். ஆனால் இந்திராணி மாற மாட்டார். அதேபோல் ஆட்சி மாறினாலும், இந்திராணி போல நிதித்துறை செயலர் சண்முகம் மாறாமல் உள்ளார்' என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.கடந்த பிப்ரவரியில் சட்டசபை விவாதத்தில் துரைமுருகன் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து பேசினார். அதற்கு பதில் அளிக்க சண்முகம் சில குறிப்புகள் அளித்து உதவி செய்தார். அதை துணை முதல்வர் பன்னீர்செல்வம், சபையில் கூறினார்.அதை கண்ட துரைமுருகன், 'நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது சண்முகம் எங்களுக்கு சாதகமாக தகவல்களை அளித்தார். இப்போது உங்களுக்கு தகவல் தருகிறார்' என்றதும் சபையில் சிரிப்பலை எழுந்தது.கருணாநிதி, ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி என நான்கு முதல்வர்களிடம் பணியாற்றி உள்ளார். நிதித்துறையில் அவர் பெற்ற அனுபவம் காரணமாக அரசு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சிறப்பாக செயல்பட்டார். நிதி நெருக்கடி காலங்களில் நிதிச்சுமையை குறைக்க அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.புதிய டி.ஜி.பி.,புதிய டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ள திரிபாதி ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். டில்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் பட்டப்படிப்பை முடித்தார். ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்பதற்காக 1983ல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார்; அந்த ஆண்டு அவர் தேர்வாகவில்லை. 1985ல் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்ச்சி பெற்றார்.தமிழகத்தில் எஸ்.பி.,யாக 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளார். டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்ற பின் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அங்கு ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்ததுடன் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றார்.இதையடுத்து தென் சென்னை இணை ஆணையராக பொறுப்பேற்றார். அப்போது தான் பிரபல ரவுடி வீரமணி உட்பட முக்கிய தாதாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர் தென்மண்டல ஐ.ஜி.,யாக இருந்தபோதுதான் ரவுடி மணல்மேடு சங்கர் சுட்டுக் கொல்லப்பட்டார்.கூடுதல் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றதும் 2011ல் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்தபோது சிறைகளில் சீர்திருத்தங்களை அமல்படுத்தினார். சிறை கைதிகள் மறுவாழ்வுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கினார்.தற்போது சீருடை பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி.,யாக இருந்து வருகிறார். இரண்டு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். பிரதமர் விருது பெற்ற முதல் காவல்துறை அதிகாரி என்ற பெருமைக்குரியவர். 30 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளை வகித்துள்ள திரிபாதி தற்போது காவல் துறை தலைமை பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இன்று மாலை 3:15 மணிக்கு, சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக பதவியேற்க உள்ளார். புதிய தலைமை செயலராக சண்முகம் இன்று அல்லது நாளை பதவியேற்பார்.

No comments:

Post a Comment