சென்னை : மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வில், தேசிய அளவில், 56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில், 49 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில், 2018ம் ஆண்டை விட, இந்த ஆண்டு, 9 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவுதேர்வு, நாடு முழுவதும், மே, 5ல் நடத்தப்பட்டது. 'போனி' புயல் தாக்கம் காரணமாக, ஒடிசாவில் மட்டும், மே, 20ல் தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வு முடிவு, தேசிய தேர்வு முகமையின், www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது.l நாடு முழுவதும், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்பட, 12 மொழிகளில், 154 நகரங்களில், 2,546 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது; 14.10 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அவர்களில், 7.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 56.50 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. 2018ம் ஆண்டை விட, 0.23 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளதுl ராஜஸ்தானை சேர்ந்த, நளின் கந்தேல்வால், மொத்தம், 720க்கு, 701 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில், முதலிடம் பெற்றுள்ளார். டில்லியை சேர்ந்த, பவிக் பன்ஸால், உத்தர பிரதேசத்தை சேர்ந்த, அக் ஷத் கவுஷிக், 700 மதிப்பெண் பெற்று, இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர்பின்தங்கிய தமிழகம்l மாநில வாரியான தேர்ச்சியில், ராஜஸ்தான், டில்லி, ஹரியானா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளன. தென் மாநிலங்களில், புதுச்சேரியின், 48.70 சதவீதத்துக்கு அடுத்த படியாக, தமிழகம், 48.57 சதவீதத்துடன், கடைசி இடத்தில் உள்ளதுl தமிழகத்தில், 1.23 லட்சம் பேர் எழுதியதில், 59 ஆயிரத்து, 785 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2018ம் ஆண்டில், 39.56 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு, 9.01 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி கிடைத்துள்ளதுl தேசிய முன்னிலை பட்டியலில், முதல், 50 இடங்களில், ராஜஸ்தான், டில்லி, உ.பி., - ம.பி., ஆந்திரா மற்றும் தெலங்கானா மாணவர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர். தமிழக மாணவர்கள் இடம்பெறவில்லைl தமிழகத்தை சேர்ந்த, பொது பிரிவு மாணவரான கார்வண்ண பிரபு, 572 மதிப்பெண்கள் பெற்று, தேசிய மாற்றுத் திறனாளிகள் பிரிவில், ஐந்தாம் இடம் பிடித்துள்ளார்.சென்னை, வேலம்மாள் பள்ளியின், மிக பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த, மாணவி ஸ்ருதி, 685 மதிப்பெண்கள் பெற்று, தேசிய மாணவியர் பிரிவில், 10ம் இடமும், தேசிய பொது பிரிவில், 57ம் இடமும், தமிழக அளவில், முதலிடத்தையும் பெற்றுள்ளார்.தேர்ச்சி மதிப்பெண் எவ்வளவு?'நீட்' தேர்வில், 2018ம் ஆண்டை விட, இந்த ஆண்டு தேர்ச்சி மதிப்பெண் அளவு அதிகரித்துள்ளது. 2018ல், முன்னேறிய பிரிவினருக்கு, 119 ஆக இருந்த, தேர்ச்சி மதிப்பெண், இந்த ஆண்டு, 134 ஆக உயர்ந்துள்ளது.இட ஒதுக்கீடு சலுகை இல்லாத, மாற்று திறனாளிகள் பிரிவில், 107 ஆக இருந்த மதிப்பெண், தற்போது, 120 ஆக அதிகரித்துள்ளது. மற்ற பிரிவுகளுக்கு, 96 ஆக இருந்த தேர்ச்சி மதிப்பெண், இந்த ஆண்டு, 107 ஆக அதிகரித்துள்ளது.நீட் தேர்வு முடிவு அடிப்படையில், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் ஆகியவற்றின் சார்பில், அகில இந்திய அளவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். இதன்படி, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, மருத்துவ சேர்க்கை நடக்கும்.தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள், தமிழக மாணவர்களுக்கு மட்டும், மாநில தரவரிசை பட்டியல் வெளியிடும். அதில், ஜாதி வாரியான இட ஒதுக்கீட்டுக்கு தரவரிசை நிர்ணயிக்கப்படும். அதன்படி, மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கும்.தமிழக மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, 3,250; சித்தா, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட, ஆயுஷ் படிப்புகளுக்கு, 333 இடங்கள் உள்ளன. இவற்றில், 15 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படும்.பெற்றோரை போல் டாக்டர்!என் பெற்றோர், டாக்டர்கள் தான். டாக்டர் ஆக வேண்டும் என்பது, என் லட்சியம். பிளஸ் 2ல், 484 மதிப்பெண் பெற்றுள்ளேன். என் பள்ளியிலேயே, 10ம் வகுப்பில் இருந்து, நீட் நுழைவு தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட நுழைவு தேர்வுகளும் எழுதியுள்ளேன். அவற்றில் இடம் கிடைக்காவிட்டால், சென்னை மருத்துவ கல்லுாரியில் சேருவேன். முயற்சியும், சரியான பயிற்சியும் இருந்தால், வெற்றி பெற முடியும்.- ஸ்ருதி, தேசிய பட்டியலில் இடம்பெற்ற தமிழக மாணவி.