வேளாண் படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு கன்னியாகுமரி மாணவி முதலிடம்

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில், கன்னியாகுமரி மாணவி, ரேவதி, 200க்கு, 200 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார்.கோவை வேளாண் பல்கலையில், 2019- - 20ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு, 51 ஆயிரத்து 876 மாணவர்கள் விண்ணப்பித்தனர். உரிய தகுதியுடன் இருந்த, 41 ஆயிரத்து, 590 மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை, பல்கலை துணைவேந்தர், குமார், நேற்று வெளியிட்டார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு கல்லுாரிகள் மற்றும் 27 இணைப்பு கல்லுாரிகளில் உள்ளன. இதில், 10 பட்டப் படிப்புகளில், 3,905 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.தரவரிசை பட்டியலில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த, ரேவதி, 200க்கு, 200, 'கட் -- ஆப்' மதிப்பெண்ணுடன் முதலிடம் பெற்றார். புதுக்கோட்டை சிவாலினி, தஞ்சாவூர் ஆலன், நாகை ஸ்ரீபீரித்திகா ஆகியோர், 198.25 மதிப்பெண்களுடன் முன்னிலை பெற்றுள்ளனர்.
துணைவேந்தர், குமார் கூறியதாவது: பி.எஸ்சி., வேளாண்மை பிரிவை பொறுத்தவரை, ஒரு இடத்துக்கு, 70 பேர் என்ற அளவில், கடுமையான போட்டி காணப்படுகிறது. பிற பிரிவுகளில், ஒரு இடத்துக்கு, 11 பேர் என்ற அளவில் போட்டி இருக்கும். மாணவர்களை காட்டிலும், மாணவியர் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர்.
மாணவர்களின் நலன் கருதி, மருத்துவ கலந்தாய்வுக்கு பின், வேளாண் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில், வகுப்புகள் துவக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
'வேளாண் மீது ஆர்வம்'முதலிடம் பிடிப்பேன் என, எதிர்பார்க்கவில்லை. மிகவும், மகிழ்ச்சியாக உள்ளது. மருத்துவத்தை காட்டிலும், வேளாண் படிப்பின் மீது, ஆர்வம் அதிகம். பி.எஸ்சி., வேளாண்மை படிப்பை, தேர்வு செய்யவுள்ளேன்.ரேவதி,மாணவி.

No comments:

Post a Comment