சென்னை:நாடு முழுவதும், 14 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற, 'நீட்' தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது.


பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, மே, 5 மற்றும் மே, 20 என, இரண்டு கட்டங்களாக நடந்தது. மே, 20ம் தேதியன்று, ஒடிசாவில், 'போனி' புயலால் பாதித்த பகுதிகளுக்கு மட்டும் நடத்தப்பட்டது. மற்ற அனைத்து மாநிலங்களிலும், மே, 5ல்தேர்வு நடந்தது.

தேர்வுக்கான கணினி வழி விடைத்தாள் திருத்தம் முடிந்துள்ளது. தேர்வை நடத்தும், தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பின்படி, நீட் தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. தேர்வு முடிவு வெளியிடப்படும் நேரத்தை, தேசிய தேர்வு முகமை அறிவிக்கவில்லை. எந்த நேரத்திலும், தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ தகவல்களை, https://ntaneet.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.