இன்ஜினியரிங் கவுன்சிலிங் இன்று, 'ரேண்டம்' எண்

சென்னை: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தோருக்கு, இன்று, 'ரேண்டம்' எண் வெளியிடப்படுகிறது.


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேருவதற்கான கவுன்சிலிங்கை, தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை நடத்துகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, மே, 2ல் துவங்கியது; 31ல் முடிந்தது.இதில், 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் என்ற சமவாய்ப்பு எண், இன்று வெளியிடப்படுகிறது.பகல், 3:00 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், ரேண்டம் எண்ணை வெளியிட உள்ளார்.
ரேண்டம் எண் என்பது, இன்ஜினியரிங் மாணவர்களுக்கு நேரடியாக தேவைப்படாது. ஆனால், அந்த எண்ணை பயன்படுத்தியே, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், தர வரிசை பட்டியலை தயாரிக்கும்.அதாவது, ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள், ஒரே, 'கட் ஆப்' மதிப்பெண் பெறும் போது, அவர்களில் யாருக்கு முன்னுரிமை என்பதில் குழப்பம் ஏற்படும்.அப்போது, கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர், முதலில் தேர்வு செய்யப்படுவார். அதில், இருவரும் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால், இயற்பியல் மதிப்பெண்ணில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை தரப்படும். 

அதிலும், சமமான மதிப்பெண் பெற்றிருந்தால், இரண்டு மாணவர்களின் நான்காவது முக்கிய பாடமான உயிரியல் அல்லது கணினி அறிவியல் போன்றவற்றில், அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை தரப்படும்.அதிலும், ஒரே மதிப்பெண் என்றால், பிறந்த தேதியில் யார் மூத்தவர் என, பார்க்கப்படும். பிறந்த தேதியும் ஒன்றாக இருந்தால், ரேண்டம் எண் என்ற, சம வாய்ப்பு எண் கணக்கில் எடுக்கப்படும்.அதாவது, இரண்டு மாணவர்களின் சம வாய்ப்பு எண்ணில், உயர்ந்த எண்ணிக்கை பெற்றிருப்பவருக்கு, தரவரிசையில் முன்னுரிமை தரப்படும்.

No comments:

Post a Comment