வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.
அவை இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இருக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கெட்டிசெவியூரில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும்.


முதல்வர் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளை விரைவில் வழங்குவார். தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள், தொழில் நிறுவனங்கள் வழங்கிய கொடை ரூ.82 கோடி அளவுக்கு திரண்டுள்ளது. இதனைக் கொண்டு பல்வேறு பணிகளை அரசுப் பள்ளிகளில் மேற்கொண்டு வருகிறோம். அதுமட்டுமல்லாமல் வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.

அவை இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இருக்கும். தமிழக அரசு கல்வித்துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். பாடப்புத்தகங்கள் 1,2,3,4,5,7,8,9,10,12 ஆகிய வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. பாடப்புத்தகங்களைத் தயாரித்த நிபுணர் குழு தொடர்ந்து இயங்கும். இந்தியாவில் மட்டுமல்லாது உலகளவில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப பாடப்புத்தகங்களில் தேவையான மாற்றங்களை இந்த குழு ஏற்படுத்தும். 77 லட்சம் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சில தனியார் பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. சீருடைகள் வழங்குவதில் மட்டும் சிறு தாமதம் இருக்கிறது. அதுவும் இம்மாத இறுதிக்குள் அனைவருக்கும் வழங்கப்பட்டுவிடும்" என்று கூறினார்