சென்னை:தமிழகத்தில், பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், 58 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன.அவற்றில், 37 ஆயிரம் பள்ளிகள், அரசின் பல்வேறு துறை சார்ந்த பள்ளிகள்; 13 ஆயிரம் பள்ளிகள், தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள்.மீதமுள்ள, 8,000 பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள். 
இப்படி அரசு உதவி பெறும் பள்ளிகள், தங்கள் பள்ளியின் பெயரை மட்டுமே, பெயர் பலகையில் குறிப்பிடுகின்றன.அதனால், மாணவர்களின் பெற்றோருக்கு, அவை தனியார் சுயநிதி பள்ளிகளோ என்ற எண்ணம் உருவாகிறது. அந்த பள்ளிகளும், அரசு உதவி பெறுவதை, பெற்றோருக்கு தெரிவிப்பதில்லை.மாறாக, மக்களின் எண்ணத்தை பயன்படுத்தி, சுயநிதி பள்ளிகளை போன்று, அதிக அளவு கல்வி கட்டணம் வசூலிக்கின்றன. இதுகுறித்து, அரசுக்கு பல்வேறு புகார்கள்வந்துள்ளன.சட்டசபை மதிப்பீட்டு குழு சார்பிலும், பள்ளி கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகள், தங்களின் பெயர் பலகையில், அரசு உதவி பெறும் பள்ளி என, பெரிய எழுத்தில் எழுத வேண்டும்.அவற்றை, முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன்சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார்.