இன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை, 'ரேங்க்' பட்டியல்

சென்னை : இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கான, 'ரேங்க்' பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கு, தமிழக உயர் கல்வி துறையின் சார்பில், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியாக, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மே, 2ல் துவங்கி, 31ல் முடிந்தது.மொத்தம், 1.33 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில், 1.04 லட்சம் பேர் மட்டும், அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும், 45 மையங்களில், ஜூன், 7 முதல், 13 வரையிலும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து, தகுதியான விண்ணப்பதாரர்களின் தரவரிசை பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது. மாணவர்களின், 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையில், ஒட்டுமொத்த தர வரிசையும், ஜாதி வாரி தர வரிசையும் நிர்ணயிக்கப்படும். இந்த தர வரிசையின் அடிப்படையில், அரசின் இடஒதுக்கீடு கொள்கையின் படி, மாணவர்கள் விரும்பும் பாட பிரிவுகள் மற்றும் அவர்கள் விரும்பும் கல்லுாரிகளில், இடங்கள் ஒதுக்கப்படும். 

மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கான, சிறப்பு ஒதுக்கீடுக்கு, நேரடி கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. தொழிற்கல்வி மாணவர்களுக்கும், நேரடி கவுன்சிலிங் நடத்தப்படும். வரும், 25ம் தேதி, கவுன்சிலிங் நடவடிக்கைகள் துவங்குகின்றன. பொதுப் பாட பிரிவு மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கவுன்சிலிங் மட்டும், ஜூலை, 3 முதல், 'ஆன்லைன்' வழியே நடத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment