அரசுப் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாணவியர் படுகாயம்

நாமக்கல் அருகே அரசுப் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில், 2 மாணவியர் படுகாயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட பொட்டிரெட்டிப்பட்டியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான இப் பள்ளியில் மொத்தம் 192 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 
தலைமை ஆசிரியை மணிமேகலை உள்பட ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வியாழக்கிழமை வழக்கம்போல் மாணவ, மாணவியர் பள்ளிக்கு வந்திருந்தனர். பிற்பகல் 3.30 மணியளவில் இடைவேளைக்காக பள்ளியில் மணியடிக்கப்பட்டது. 
அப்போது, பொட்டிரெட்டிப்பட்டி போயர் தெருவைச் சேர்ந்த செல்வவேல் மகள் காயத்ரி(9), பெருமாள் மகள் கனிஷ்கா(9) ஆகியோர் அங்குள்ள கழிவறைக்குச் செல்வதற்காக வந்தனர். 2010-11-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கழிவறைச் சுவர் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. கழிவறைக்குச் செல்வதற்காக, அதன் கதவை மாணவியர் இருவரும் இழுத்தபோது, திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில், காயத்ரிக்குத் தலையிலும், கனிஷ்காவுக்கு கால் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அங்கிருந்த மற்ற மாணவியர் கூச்சலிட, தலைமை ஆசிரியை மணிமேகலை மற்றும் ஆசிரியைகள் ஓடிவந்து இருவரையும் மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுவர் இடிந்த தகவல் கேட்டு பள்ளிக்கு வந்த பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துச் சென்றனர். 
சம்பவம் நடந்த வேளையில், சுவரின் அருகில் மாணவியர் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 
மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து மாணவியர் மற்றும் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மாவட்டம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படும் சுவர்களை கணக்கிட கல்வித் துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment