அரசு தரும், 'நீட்' பயிற்சியால் பலனில்லை ஆர்வம் காட்டாத பள்ளி மாணவர்கள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், ஆண்டுக்காண்டு வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இதனால், அரசு சார்பில் வழங்கப்படும், 'நீட்' பயிற்சியில் பங்கேற்க, மாணவ - மாணவியரிடம் ஆர்வம் இல்லை.


தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதில், அரசு பள்ளி மாணவ - மாணவியர் பாதிக்கப்படக் கூடாது எனக்கூறி, ஒன்றியத்துக்கு, ஒன்று வீதம், 412 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 'ஸ்பீடு' எனும் தனியார் நிறுவனம் மூலம், பயிற்சி அளிக்கப்பட்டது.பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ சேர்க்கை நடந்தபோது, அரசு பள்ளி மாணவ - மாணவியர், ஓரளவுக்கு, எம்.பி.பி.எஸ்., சேர முடிந்தது. கடந்த ஆண்டில், அரசு பள்ளி மாணவர்களில், நான்கு பேருக்கு மட்டுமே, மருத்துவ கல்லுாரியில், சீட் கிடைத்தது.நடப்பு கல்வியாண்டில், ஒரே ஒரு மாணவிக்கு மட்டுமே, சீட் கிடைத்துள்ளது. இதனால், அரசு பயிற்சி மையங்களின் மீதான நம்பிக்கை, மாணவ - மாணவியரிடையே குறைந்து வருகிறது.

இது குறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:'நீட்' தேர்வு மூலம், பயிற்சி மையங்களின் வணிகம், பல மடங்கு அதிகரித்துள்ளது. தொடர்ந்து, ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் கூட, நீட் தேர்வுக்காக, பல லட்சம் ரூபாய் கட்டி, பயிற்சி பெறுகின்றனர். இவர்களுடன், கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ - மாணவியர், போட்டியிட முடிவதில்லை.அரசு சார்பில், பல கோடி ரூபாய் செலவு செய்து, ஸ்பீடு நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கினாலும், அவற்றின் மூலம், அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு பயனேதும் இல்லை.இதில் படித்து, மருத்துவ கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, இரட்டை இலக்கத்தை கூட தொட முடியவில்லை.இதனால், அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு, எம்.பி.பி.எஸ்., என்பது எட்டாக்கனியாக மாறி விட்டது. இதற்கேற்ப, அரசு பள்ளி மாணவ - மாணவியரும், வேறு துறையை தேர்வு செய்து விடுகின்றனர்.இதனால், அரசு பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற, எவரும் பெயர் கொடுக்க முன்வருவதில்லை. அதிகாரிகளின் கட்டாயத்துக்காக, ஆசிரியர்களே, மாணவர்களின் பெயர்களை பரிந்துரை செய்ய வேண்டியுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment