புதுடில்லி : தேர்வுகளை நடத்துவதில் 200 கோடி ரூபாய்க்கு அதிகமாக நிதி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் தேர்வு கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கான தேர்வு கட்டணங்களை சமீபத்தில் பல மடங்கு உயர்த்தியது. இதற்கு பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. இந்நிலையில் சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:மாணவர்களுக்கான 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை நடத்துவது கேள்வித் தாள்கள்கசியாமல் தடுப்பது, தவறு இன்றி கேள்வித்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகியவற்றால் சி.பி.எஸ்.இ.,க்கு 200 கோடி ரூபாய் அளவுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. 

மேலும் ஜே.இ.இ., 'நீட்' போன்ற தேர்வுகளை நடத்துவதற்கான நிதிச் சுமையும் சி.பி.எஸ்.இ.மீது விழுந்துள்ளது. இந்த நிதி பற்றாக்குறையில் இருந்து மீள்வதற்காகவே தேர்வுக்கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.