சென்னை : ஜாதி அடையாளமாக, மாணவர்கள், கையில் வண்ண கயிறு கட்டி வருவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை இயக்குனர், கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் சில பள்ளிகளில், மாணவர்கள், வண்ண கயிறுகளை கைகளில் கட்டியுள்ளனர். அவை, சிகப்பு, மஞ்சள், பச்சை மற்றும் காவி நிறத்தில் உள்ளன. அதேபோல, மோதிரம் அணிந்துள்ளனர்; நெற்றியில் திலகமிட்டுள்ளனர். தாழ்ந்த ஜாதி, உயர்ந்த ஜாதி என, தங்களின் ஜாதி அடையாளத்தை காட்டுவதற்காக, இவ்வாறு அணிந்துள்ளனர்.இதனால், மாணவர்கள் இடையே, மோதல் ஏற்படுகிறது என, 2018 ஐ.ஏ.எஸ்., பயிற்சி அலுவலர்கள், அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். 

எனவே, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், இதுபோன்ற நடவடிக்கை உள்ள பள்ளிகளை, அடையாளம் காண வேண்டும். இதுபோன்ற செயல்களை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், அறிவுரை வழங்க வேண்டும்.ஜாதி அடையாளத்தை குறிக்கும் வகையிலான, வண்ண கயிறுகளை, மாணவர்கள் கட்ட அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு செய்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான விபரங்களை, இணை இயக்குனருக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.