அரசு ஊழியர் ஒழுங்கு விதி திருத்தம் செய்ய குழுமதுரை: விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் அருகே எல்.மேட்டூரை சேர்ந்தவர்  காளீஸ்வரி. இவர் ஏற்கனவே திருமணமானவர். முதல் கணவரை சட்டப்படி விவாகரத்து செய்யாத நிலையில் அரசு ஊழியரான அம்பேத்கர் (இவர் முதல்  மனைவியை விவாகரத்து செய்தவர்) என்பவரை, தங்களுக்குள் ஒப்பந்த அடிப்படையில் 2வதாக திருமணம் செய்தார். அம்பேத்கர் பணிக்காலத்தில் திடீரென உயிரிழந்தார்.  இதனால், தனக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை கேட்டு  காளீஸ்வரி அதிகாரிகளிடம் மனு அளித்தார். இதற்கு அம்பேத்கரின் முதல் மனைவியின் மகள் ஆட்சேபம் தெரிவித்தார். இதனால் காளீஸ்வரியின் கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது. இதை ரத்து செய்து, தனக்கு வேலை வழங்குமாறு  உத்தரவிடக்கோரி காளீஸ்வரி தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ெசய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தனது முதல் கணவரை சட்டப்படி விவாகரத்து செய்யாத நிலையில், அரசு ஊழியரை இரண்டாவதாக ஒப்பந்த அடிப்படையில் திருமணம் செய்துள்ளார்.  சட்டப்படி விவாகரத்து செய்யாத நிலையில் இரண்டாவதாக நடந்த திருமணத்திற்கு ஏ.லெட்சுமிபுரம் விஏஓ சான்றிதழ் வழங்கியுள்ளார். சான்றிதழ் வழங்கியதற்கான பதிவு ஆவணமும் அவரிடம் இல்லை. இதுபோன்று சான்றிதழ் வழங்க  விஏஓவிற்கு அதிகாரம் கிடையாது. இந்த செயல் சட்டப்படி தவறு. விஏஓ அலுவலகங்களில் சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பாக பதிவேடு பராமரிக்கப்படுவதில்லை. இதற்காக பதிவேடுகளை தனியாகவும், முறையாகவும் பராமரிக்க வேண்டும்.  இதன்மூலம்தான் எதிர்காலத்தில் அந்த சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியும். பதிவேடு பராமரிக்கப்படாதது பெருமளவில் முறைகேட்டிற்கு தான் வழிவகுக்கும்.

குறிப்பாக, விஏஓக்கள் மீதே அதிகளவு லஞ்சப்புகார்கள் எழுகின்றன. சடலங்களை எரிப்பதற்கான நிலையில் கூட இறப்பு சான்றிதழ் வழங்க விஏஓக்கள் லஞ்சம் கேட்கின்றனர். தாலுகா அலுவலங்களில் சாதாரண மக்களிடம் லஞ்சம் கேட்டு  துன்புறுத்துகின்றனர். அரசு நிலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணையாக விஏஓக்கள் உள்ளனர். தகுதியற்றவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடைப்பதற்காக சான்றிதழ்கள் வழங்குகின்றனர். இதனால் நடத்தை மீறல், பணி செய்ய மறுத்தல்,  பணியில் மெத்தனம் மற்றும் குறைபாடு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடைய விஏஓக்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், இந்த குற்றங்களுக்கான  தண்டனையை உயர்த்தவும், அரசு ஊழியர்கள் ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு விதிகளில் போதுமான அளவு திருத்தம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதற்காக விதிகள் திருத்தக்குழுவை அரசின் வருவாய்த்துறை செயலர், பணியாளர்  நலன் மற்றும் நிர்வாக சீரமைப்புத்துறை செயலர்கள் தரப்பில் அமைக்க வேண்டும்.

தாலுகா அலுவலகங்கள் மற்றும் விஏஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசாரும், துறை சார்ந்த உயரதிகாரிகளும் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்வது குறித்து, அரசு தரப்பில் உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும். பணி  பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விஏஓக்களின் சொத்து விபரங்களை சரிபார்க்கவும், அதில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரிய வந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், விஏஓக்களின் பணி மற்றும் கடமைகளை  தெரிவிக்கும் வகையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அரசுத் தரப்பில் அறிவுறுத்த வேண்டும். விஏஓ அலுவலங்களில் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களின் விபரத்தையும், தனி பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்கவும் உத்தரவிட  வேண்டும். மனுதாரர் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. We are urgently in need of kidney donors with the sum of $500,000.00 USD (3 crore) and Also In Foreign currency. Apply

    Now!,For more info Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete