புத்தகங்களே வராமல் தேர்வெழுதுவது எப்படி? சாதனை படைக்கும் அரசு பள்ளியின் வேதனை

 புத்தகங்களே வராமல் தேர்வெழுதுவது எப்படி? சாதனை படைக்கும் அரசு பள்ளியின் வேதனை

திருநெல்வேலி:நெல்லையில், 4,000த்துக்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கும் மாநகராட்சி பள்ளிக்கு, இன்னமும் புத்தகங்கள் வரவில்லை. ஆசிரியர்களும் பற்றாக்குறையாக உள்ளதால், மாணவியர், தேர்வுகளை புறக்கணித்தனர்.


திருநெல்வேலி, டவுன் கல்லணையில், 1949ல் துவக்கப்பட்ட, மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 4,400 மாணவியர் படிக்கின்றனர்.ஒவ்வொரு வகுப்பிலும், 13 பிரிவுகள் உள்ளன. பிளஸ் 1 வகுப்பில், அறிவியல் பாடப்பிரிவு, கம்ப்யூட்டருடன் அக்கவுன்டன்சி, டைப்பிங், நர்சிங், தொழிற்கல்வி என மொத்தம், 13 பிரிவுகள் உள்ளன.அக்கவுன்டன்சி பாடத்துடன், கம்ப்யூட்டர் கல்வியும் இருப்பதால், அதை, இரண்டு வகுப்புகளாக பிரித்து, பாடம் நடத்துகின்றனர்.கல்வித் தரத்தில், தனியார் பள்ளிக்கு நிகராக உள்ளது. 2010ல், 10ம் வகுப்பு தேர்வில், இங்கு பயின்ற மாணவி ஜாஸ்மின், மாநில அளவில் முதலிடம் பிடித்தார். மாநகராட்சி, நகராட்சி பள்ளி தேர்ச்சி விகிதத்தில், இப்பள்ளி தொடர்ந்து சிறப்பிடம் பெற்று வருகிறது.கல்வி ஆண்டு துவங்கி, இரண்டு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், இன்னமும், பிளஸ் 1 வகுப்பில், கணக்கு பதிவியல், பொருளாதாரம், வணிக கணிதம் ஆகிய பாடங்களுக்கு, புத்தகங்கள் வரவில்லை.புதிய பாடத் திட்டம் அறிமுகமாகியுள்ளதால், பழைய புத்தகங்களை வைத்து, வகுப்பு நடத்த முடியவில்லை. இரண்டு மாதங்கள் வீணாகி விட்டன.மேலும், ஆங்கிலம், கணக்கு பதிவியல், வேதியியல், வணிகவியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரியல் பாடங்களுக்கு ஆசிரியைகள் இல்லை.புத்தகங்களும் வரவில்லை, ஆசிரியர்களும் நியமிக்கப்படாத நிலையில், நேற்று முன்தினம், இடைத்தேர்வு துவங்கியது. மாணவியர், தேர்வுகளை புறக்கணித்தனர்.
மாநகராட்சி கமிஷனர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, ''பள்ளியின் கட்டட வசதி, துாய்மை, குடிநீருக்கு மட்டுமே மாநகராட்சி பொறுப்பு. ஆசிரியர் நியமனம், புத்தகம் வழங்குதல் போன்றவற்றுக்கு, கல்வித் துறை தான் பொறுப்பு,'' என்றார்.
தலைமை ஆசிரியை நாச்சியார் ஆனந்த பைரவி, ''சிறப்பான தேர்ச்சி விகிதம் இருப்பதால், மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2,000 மாணவியர் இருந்தபோது, இருந்த ஆசிரியைகள் தான், தற்போதும் உள்ளனர். இடமாறுதல் கவுன்சிலிங் முடிந்த பின், ஆசிரியர்களை நியமிப்பதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர்,'' என்றார்.

No comments:

Post a Comment